எங்கள் வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை - ரோஹித் சர்மா!

Updated: Sat, May 06 2023 20:22 IST
Our batters didn't put up enough runs, says Rohit Sharma! (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் இன்று நடைபெற்ற 49ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய மும்பை அணி நேஹல் வதேராவின் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய மதீஷா பதிரானா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். 

இந்நிலையில், தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா “என்ன தவறு நடந்தது என்று நான் எல்லா இடங்களையும் யூகித்து பார்க்கிறேன். எங்கள் வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. ஒரு பேட்டிங் யூனிட் ஆக எங்களுக்கு இது மோசமான நாள்.

நான் மூன்றாவது இடத்திற்கு வருவதற்கு காரணம் திலக் விளையாட முடியாததுதான். மிடில் ஓவர்களில் இந்திய பேட்ஸ்மெண்ட்கள் வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் பவர் பிளேவிலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.

பியூஸ் சாவ்லா நன்றாகப் பந்து வீசுகிறார். மற்றவர்கள் அவரைச் சுற்றி செயல்பட வேண்டும். நாங்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறோம். இது ஒரு குழு விளையாட்டு. ஆனால் நாம் நிறைய கற்றல்களை எடுத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல முடியும்.

வெளிப்படையாக இந்த ஆண்டு ஹோம் கிரவுண்டுகளில் எந்த அட்வான்டேஜும் இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் நன்றாக கிரிக்கெட் விளையாட வேண்டும். அடுத்த இரண்டு ஹோம் ஆட்டங்கள் முக்கியமானது. திரும்பி வர நன்றாக செயல்பட்டே ஆகவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை