நாங்கள் தோல்விக்கான காரணமாக எதையும் கூற விரும்பவில்லை - ராகுல் டிராவிட்!
இந்திய - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இன்று முடிவடைந்தது . இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது முன்னதாக 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா நான்காம் நாள் ஆட்டத்தை 164 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த நிலையில் முடித்தது.
விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே களத்தில் இருந்ததால் நிச்சயமாக இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்தது . இன்றைய நாள் ஆட்டத்தில் 280 ரன்கள் தேவை என்ற நிலையில் களம் இறங்கிய விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரஹானே பொறுமையாகவே ஆட்டத்தை துவங்கினர் . இருப்பினும் துரதிஷ்டவசமாக விராட் கோலி 49 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் இந்திய அணியின் நம்பிக்கையும் சரிந்தது . இதனைத் தொடர்ந்து விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததால் இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது .
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. கடந்த முறை நியூசிலாந்து அணி இடம் தோல்வியை தழுவிய இந்தியா இந்த முறை ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவி இருக்கிறது . கடந்த பத்து வருடங்களில் ஐசிசி கோப்பை காண இறுதிப் போட்டியில் இந்திய அணி சந்திக்கும் நான்காவது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இந்த இறுதி போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “இந்த டார்கெட் சவாலான ஒன்றுதான், ஆனால் அடிக்க முடியாதது என்று கிடையாது. ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாங்கள் இது போன்ற இக்கட்டான சூழ்நிலை கொண்ட போட்டிகளில் கூட மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளோம்.
இந்த போட்டியில் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால் அது அமையாமல் போய்விட்டது. முதல் இன்னிங்ஸ்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்களை குவித்தனர். 469 ரன்கள் அடிக்கும் பிட்ச் இது கிடையாது. முதல் இன்னிங்சில் எங்களுடைய பந்துவீச்சு மோசமாக இல்லை என்றாலும் எளிதாக ரன்களை விட்டுக்கொடுக்கும் அளவில் இருந்தது.
டிராவிஸ் ஹெட்-க்கு எதிராக நாங்கள் மாற்று திட்டத்தை யோசித்து இருக்க வேண்டும். அதேபோன்று போட்டியின் நான்காம் நாள் மற்றும் ஐந்தாம் நாளில் இன்னும் சிறப்பான ஆட்டத்தை விளையாடி இருக்க வேண்டும். இரண்டாவது இன்னிங்சிலும் இந்த மைதானம் பேட்டிங்கிற்கு நன்றாகவே உதவியது. 300க்கும் மேற்பட்ட ரன்கள் இலக்காக இருந்தால் நிச்சயம் வெற்றியை நோக்கி நகர்ந்து இருக்க முடியும். நமது அணியில் உள்ள டாப் ஆர்டர் வீரர்கள் அனைவருமே உலகத்தரம் வாய்ந்த வீரர்கள்.
இதே வீரர்கள் தான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் வெற்றியை பெற்று தந்துள்ளனர். இந்த தோல்விக்கு காரணம், இன்றைய நாள் நம்முடைய நாளாக இல்லை. எனவே இந்த இக்கட்டான நிலையை சந்தித்துள்ளோம். ஐசிசி கோப்பையை கைப்பற்றும் நெருக்கத்தில் வந்தும் போட்டியின் நாள் நம்முடையதாக அமையாததால் தோல்வியை சந்தித்து இருக்கிறோம். ஆனால் கூடிய சீக்கிரம் வெற்றி நமக்கு கிட்டும்.
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக தயாராக மூன்று வாரங்களுக்கு முன்னதாக நாங்கள் இங்கு வந்திருக்க வேண்டும். அதேபோன்று இந்த போட்டிக்கு முன்னதாக ஒரு பயிற்சி போட்டியிலும் கட்டாயம் விளையாடி இருக்க வேண்டும். அது எங்களுக்கு நிறைய உதவி புரிந்திருக்கும். ஆனால் அதை நாங்கள் தோல்விக்கான காரணமாக கூற விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.