விராட் கோலியின் கேப்டன்சி பறிப்பு குறித்து சல்மான் பட் கருத்து!

Updated: Thu, Dec 09 2021 21:21 IST
Image Source: Google

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

விராட் கோலி பதவி விலக தயாராக இல்லை என்று கூறிய போதும், அவரின் பதவியை பறித்து ரோஹித்திடம் ஒப்படைத்ததால் பிசிசிஐ மீது ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

இந்தியாவின் மூன்று வடிவ கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்த கோலிக்கு அதிக அழுத்தங்கள் இருந்ததால் தான் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஆனால் வரும் 2023ஆம் ஆண்டு நடைபெறும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை வழிநடத்தி கோப்பை வெல்வேன் என விராட் கோலி கூறியிருந்தார். ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் ரோஹித் சர்மாவிடம் முழு பொறுப்பையும் பிசிசிஐ ஒப்படைத்துள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ-ன் இந்த முடிவு பெரிய ஆச்சரியப்படும் விஷயம் இல்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “கோலி விவகாரத்தில் இப்படி நடக்கும் என எனக்கு முன்பே தெரியும். வெள்ளைப்பந்து மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கும் இடையே ஒரு கோடு இருக்க வேண்டியது அவசியம். அதனை தான் தற்போது செய்துள்ளனர். இதன் மூலம் விராட் கோலியின் அழுத்தங்கள் குறையும்.

இனி விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்படுவதை பார்க்கலாம். இந்திய அணி அதிகப்படியான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் விராட் கோலியின் மீது ரசிகர்களின் பார்வை திரும்புகிறது. அவர் அரைசதம் அடித்தால் கூட யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. ரன்களை கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் வெற்றி தோல்வியையே பார்க்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

விராட் கோலிக்கு துணைக் கேப்டன் பதவி கூட கொடுக்கப்படாது என தெரிகிறது. டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கே.எல்.ராகுலை துணைக்கேப்டனாக நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. அவருக்கு இன்னும் வயது இருப்பதால் எதிர்காலத்தில் அவரையே கேப்டனாக நியமிக்க பயிற்சி பெறுவார் என நம்பப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை