SA20 League: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது பார்ல் ராயல்ஸ்!

Updated: Sun, Jan 22 2023 22:08 IST
Paarl Royals registered a much-needed win for their SA20 campaign! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் வெய்ன் பார்னெல் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய கேப்பிட்டல்ஸ் அணியில் வில் ஜேக்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் - தியூனிஸ் டி ப்ரூயின் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் குசால் மெண்டீஸ் 26 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 37 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரைலி ரூஸோவ் 19, டேட்ஸ்வெல் 2 என விக்கெட்டுகளை இழந்தனர். 

அதேசமயம் சிறப்பாக விளையாடி வந்த டி ப்ருயின் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் 47 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 53 ரன்களைச் சேர்த்திருந்த அவர், ஆடம்ஸ் பந்துவீச்சில் சிக்சர் அடிக்க முயற்சித்து பவுண்டரி லைனிலிருந்து லூபிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இறுதியில் ஜிம்மி நீஷம் ஒருசில பவுண்டரிகளை அடித்து 21 ரன்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களைச் சேர்த்தது. பார்ல் ராயல்ஸ் அணி தரப்பில் ஆடம்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜேசன் ராஸ் - விஹான் லூப் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஜேசன் ராய் 21 ரன்களிலும், லூப் 29 ரன்களுக்கும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் வந்த ஜோஸ் பட்லரும் அதிரடி ஆட்டத்தில் மிரட்ட, மறுமுனையில் களமிறங்கிய டேன் விலாஸ் 24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

பின்னர் பட்லருடன் இணைந்த டேவிட் மில்லரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 37 ரன்களில் ஆட்டமிழந்து  பெவிலியன் திரும்ப, இறுதிவரை களத்தில் இருந்த டேவிட் மில்லர் 28 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் பார்ல் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை