இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ், வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தின் பங்களதேஷ் பிரீமியர் லீக், இலங்கையின் லங்கா பிரீமியர் லீக் என ஒவ்வொரு நாடும் தங்களுக்கென தனி டி20 தொடர்களை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 லீக் தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களுடைய பார்ல் ராயல்ஸ் அணியும் 2025ஆம் ஆண்டிற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ராயல்ஸ் குழுவின் இயக்குனர் குமார் சங்கக்காரா, "ஜோ ரூட் ஒரு அற்புதமான வீரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம், மேலும் அவரை மீண்டும் ராயல்ஸில் இணைப்பதை எதிர்பார்த்துள்ளேன். அவர் பல ஆண்டுகளாக அவர் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து அணிகளுக்கும் சிறந்த பங்களிப்பாளராக இருந்து வருகிறார், மேலும் அவரது பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பண்புகளுடன் ஒரு மதிப்புமிக்க ஆல்-ரவுண்டராகவும் நிரூபிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் ஜோ ரூட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். மேற்கொண்டு உலகளவில் 100க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோ ரூட் 2,432 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் அவர் 51 கேட்ச்சுகளையும், பந்துவீச்சில் 8.47 என்ற எகானாமியில் 27 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.