பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. ஆனால் தொடர் மழை காரணமாக இப்போட்டியின் முதல் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது. 

Advertisement

இதையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் மற்றும் சைம் அயூப் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் 6 பந்துகளை எதிர்கொண்ட அப்துல்லா ஷஃபிக் ரன்கள் ஏதுமின்றி தஸ்கின் அஹ்மதின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் சைம் அயூப்புடன் இணைந்த கேப்டன் ஷான் மசூத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

Advertisement

இதில் இருவரும் இணைந்து பொறுப்புடன் விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஷான் மசூத்தும், 58 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயுப் ஆகியோரும் விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் சௌத் ஷகீல் 16 ரன்களிலும், பாபர் ஆசாம் 31 ரன்களிலும், ரிஸ்வான் 29 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தார். 

இதனையடுத்து வந்த அகா சல்மான் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்த நிலையில், 54 ரன்களில் விக்கெட்டை இழக்க அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மெஹிதி ஹசன் மிராஸ் 5 விக்கெட்டுகளையும், தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், நஹித் ரானா மற்றும் ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு ஷாத்மான் இஸ்லாம் - ஜகிர் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணியானது விக்கெட் இழப்பின்றி 10 ரன்களை எடுத்துள்ளது. இதில் ஷாத்மன் இஸ்லாம் 6 ரன்களுடனும், ஜகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இதனையடுத்து 264 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணியானது நாள் மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News