PAK vs ENG, 2nd Test: இங்கிலாந்தை வீழ்த்தி பாதிலடி கொடுத்தது பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி, இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி முல்தானில் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியானது காம்ரன் குலாம் மற்றும் சைம் அயூப் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 366 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன்களையும், சைம் அயூப் 77 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் சதமடித்து அசத்திய நிலையில் மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் சோபிக்க தவறினர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஜேமி ஸ்மித் 12 ரன்களுடனும், பிரைடன் கார்ஸ் 2 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் ஜேமி ஸ்மித் 21 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து பிரைடன் கார்ஸ் 4 ரன்னிலும், மேத்யூஸ் பாட்ஸ் 6 ரன்னிலும், ஷோயப் பஷீர் 9 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதில் ஜேக் லீச் 24 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சஜித் கான் 7 விக்கெட்டுகளையும், நோமன் அலி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 75 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியும் தொடக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது.
அதன்படி கள்மிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஆகா சல்மான் அரைசதம் கடந்ததுடன் 63 ரன்களை எடுத்திருந்த நிலையில் மற்ற வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தன்ர். இதனால் பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 221 ரன்களை எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷோயப் பஷீர் 4 விக்கெட்டுகளையும், ஜேக் லீக் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 297 ரன்களை பாகிஸ்தான் அணி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் இலக்கை நோக்கி விளையடிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் ரன்கள் ஏதுமின்றியும், ஸாக் கிரௌலி 3 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் ஒல்லி போப் 22 ரன்னிலும், ஜோ ரூட் 18 ரன்னிலும், ஹாரி புரூக் 16 ரன்னிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களையும், பிரைடன் கார்ஸ் 27 ரன்களையும் சேர்த்ததை தாவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இங்கிலாந்து இணி இரண்டாவது இன்னிங்ஸில் 144 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.
Also Read: Funding To Save Test Cricket
பாகிஸ்தான் தரப்பில் நோமான் அலி 8 விக்கெட்டுகளையும், சஜித் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்ஹான் அணியானது 152 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்தது. இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை சஜித் கான் வென்றார். மேற்கொண்டு பாகிஸ்தான் அணியானது கிட்டத்திட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியிலும் வெற்றி அசத்தியுள்ளது.