PAK vs ENG, 3rd Test: சஜித், நோமன் அபாரம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!

Updated: Sat, Oct 26 2024 12:50 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து டெஸ்ட் தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்து அசத்தியது.

இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜேமி ஸ்மித் மற்றும் பென் டக்கெட் ஆகியோர் அரைசதம் கடந்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக் ஜேமி ஸ்மித் 89 ரன்களையும், பென் டக்கட் 52 ரன்களையும் சேர்த்தனர். 

பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சஜித் கான் 6 விக்கெட்டுகளையும், நோமன் அலி 3 விக்கெட்டுகளையும் கைப்பறினர். இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் மீண்டும் சோபிக்க தவறி சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய சௌத் சகீல் சதமடித்து அசத்திய நிலையில், அவருக்கு துணையாக நோமன் அலி, சஜித் கான் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டத காரணமாக பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 344 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. 

இதில் அதிகபட்சமாக் சௌத் சகீப் 134 ரனக்ளையும், நோமன் அலி 45 ரன்களையும், சஜித் கான் 48 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ரெஹான் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.  இதையடுத்து 77 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்களை எடுத்தது.

இந்நிலையில் இன்று மூன்றாம் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் 5 ரன்களுடனும், ஹாரி புரூக் 3 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் ஜோ ரூட் 33 ரன்களுக்கும், ஹாரி புரூக் 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், கஸ் அட்கின்சன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் நோமன் அலி 6 விக்கெட்டுகளையும், சஜித் கான் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Also Read: Funding To Save Test Cricket

இதனால் பாகிஸ்தான் அணிக்கு 36 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் சைம் அயூப் 8 ரன்னில் ஆட்டமிழந்தாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஷான் மசூத் 23 ரன்களையும், அப்துல்லா ஷஃபிக் 5 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு பாகிஸ்தான் அணி கைப்பற்றும் முதல் தொடர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை