பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - டிம் ராபின்சன் இணை தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இதில் அதிரடியாக தொடங்கிய டிம் செய்ஃபெர்ட் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டிம் ராபின்சன் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் -மார்க் சாப்மேன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.  ஆனால் இதில் ஃபாக்ஸ்கிராஃப்ட் 13 ரன்களுக்கும், மார்க் சாப்மேன் 19 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம் ஒரு ரன்னிலும், மைக்கேல் பிரேஸ்வெல் 4 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, கோல் மெக்கன்ஸி 15 ரன்களோடு நடையைக் கட்டினார்.

Advertisement

அதன்பின் களமிறங்கிய இஷ் சோதி, பென் சியர்ஸ், பென் லிஸ்டர் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.  இதனால் நியூசிலாந்து அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிடி 3 விக்கெட்டுகளையும், முகமது அமீர், அப்ரார் அஹ்மத் மற்றும் ஷதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - கேப்டன் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயூப் 4  ரன்களில் விக்கெட்டை இழக்க, கேப்டன் பாபர் ஆசாமும் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து களமிறங்கிய உஸ்மான் கான் 7 ரன்களை எடுத்திருந்த நிலையில் இஷ் சோதி பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இதனால் பாகிஸ்தான் அணி 56 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் முகமது ரிஸ்வானுடன் இணைந்த இர்ஃபான் கான் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.

அதேசமயம் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது ரிஸ்வான் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வான் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 45 ரன்களையும், இர்ஃபான் கான் 18 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 12.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News