பாபர் ஆசாம் அணியில் இருந்து நீக்கப்படவில்லை - பாக்., பயிற்சியாளர்!

Updated: Mon, Oct 14 2024 20:17 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இதனையடுத்து பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் நாளை (அக்.15) முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் அணி ஏற்கெனவே முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியைத் தழுவிய நிலையில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இப்போட்டியில் அந்த அணி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அணியில் படுதோல்வியின் காரணமாக அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் ஆசாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, சர்ஃப்ராஸ் அகமது உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். 

அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர பேட்டரான பாபர் ஆசாம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, குறிப்பாக ஐசிசி டி20 உலகக்கோப்பை, வங்கதேச டெஸ்ட் தொடர், இங்கிலாந்து டெஸ்ட் போட்டி என தொடர்ச்சியாக பாபர் ஆசாம் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்துள்ளார். தொடர்ந்து பேட்டிங்கில் சோபிக்க முடியாமல் தவித்து வரும் பாபர் ஆசாம் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாகவே அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

 

இந்நிலையில் பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் இடம்பெறாதது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் அந்த அணியின் துணை பயிற்சியாளர் அசார் மக்முத் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "பாபர் ஆசாம் விளையாட தயாராக இருந்தார், ஆனால் அவருக்கு ஓய்வு கொடுக்க இதுவே சிறந்த நேரம் என்று தேர்வுக் குழு நினைத்தது, பாபர் ஆசாம் அணியில் இருந்து நீக்கப்படவில்லை. அவர் ஓய்வில் உள்ளார். அவர் எங்களின் நம்பர் 1 வீரர்" என்று தெரிவித்துள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

முன்னதாக மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாகவே அணியில் இருந்து பாபர் ஆசாம் நிக்கப்பட்ட நிலையில், அவர் குறித்து சக வீரர் ஃபகர் ஸமான் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியுடன் பாபர் ஆசாமை ஒப்பிட்டு தனது கருத்தினை தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் துணை பயிற்சியாளர் அசார் மக்முத்தும் பாபர் ஆசாமிற்கு ஆதரவாக பேசியுள்ளது சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை