சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகள்; பாகிஸ்தான் அணி சாதனை!
BAN vs PAK, 3rd T20I: வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150+ வெற்றிகளைப் பதிவுசெய்த உலகின் இரண்டாவது அணி எனும் பெருமையை பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது.
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் சாஹிப்சாதா ஃபர்ஹான் 63 ரன்களையும், ஹசன் நவாஸ் 33 ரன்களையும் சேர்க்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய வங்கதேச அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் அதிகபட்சமாக முகமது சைஃபுதின் 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் வங்கதேச அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்னில் ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்ஸா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது. இருப்பினும் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வங்கதேச அணி வெற்றியைப் பதிவுசெய்ததன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்த டி20 தொடரை வென்றது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதை சாஹிப்சதா ஃபர்ஹானும், தொடர் நாயகன் விருதை ஜக்கர் அலியும் வென்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அதன்படி டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளைப் பதிவுசெய்த உலகின் இரண்டாவது அணி எனும் பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இதற்கு முன் இந்திய அணி சர்வதேச டி20 போட்டிகளில் 150+ வெற்றிகளைப் பதிவுசெய்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பதிவுசெய்த அணிகள்
- 164 - இந்தியா (247 போட்டிகள்)
- 150* - பாகிஸ்தான் (264 போட்டிகள்)
- 122 - நியூசிலாந்து (234 போட்டிகள்)
- 114 - ஆஸ்திரேலியா (205 போட்டிகள்)
- 110 - தென் ஆப்பிரிக்கா (200 போட்டிகள்)
- 108 - இங்கிலாந்து (207 போட்டிகள்)
- 94 - வெஸ்ட் இண்டீஸ் (222 போட்டிகள்)