ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளன. இதையடுத்து ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதற்காக ஆசிய அணிகள் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன.
அதன் ஒருபகுதியாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஃபகர் ஸமான் - இமாம் உல் ஹக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 2 ரன்களிலும், கேப்டன் பாபர் ஆசாம் ரன்கள் ஏதுமின்றியும், முகமது ரிஸ்வான் 21 ரன்களுக்கும், அகா சல்மான் 7 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான இமாம் உல் ஹக் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக இஃப்திகார் அஹ்மத் 30 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க, மறுபக்கம் 61 ரன்களை எடுத்திருந்த இமால் உல் ஹக்கும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷதாப் கான் ஓரளவு தாக்குப்பிடித்து 39 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறியதால், பாகிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், முகமது நபி, ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் இப்ராஹிம் ஸத்ரான், ரஹ்மத் ஷா ஆகியோர் அடுத்த்டுத்து ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதியும் ரன்கள் ஏதுமின்றி நசீம் ஷா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் அதுவரை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹ்மனுல்லா குர்பாஸும் 18 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது நபி, ரஷித் கான், முஜூப் உர் ரஹ்மான் ஆகியோரது விக்கெட்டுகளை பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராவுஃப் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 59 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஹாரிஸ் ராவுஃப் 5 விக்கெட்டுகளையும், ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலையைப் பெற்றுள்ளது.