ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப்பதக்கத்தை வென்று சாதித்தது. அதன்படி இன்று நடைபெற்ற வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது இந்திய அணி. இதனையடுத்து பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.
அதன்படி பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “தலைமுறை தலைமுறையாக போற்றப்படும் ஒரு சாதனை இது. இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் பிரகாசமாக ஜொலித்து, வெண்கலப் பதக்கத்தை நாட்டிற்கு வென்றிருக்கிறது. ஒலிம்பிக்கில் அவர்கள் பெற்ற இரண்டாவது பதக்கம் என்பது சிறப்பானதாகும்.
அவர்களின் வெற்றி என்பது திறமை, விடாமுயற்சி மற்றும் குழு உணர்வின் வெற்றி. அவர்கள் மகத்தான துணிச்சலையும் நெகிழ்ச்சியையும் காட்டினார்கள். வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். ஒவ்வொரு இந்தியரும் ஹாக்கியுடன் உணர்ச்சி ரீதியிலான தொடர்பைக் கொண்டுள்ளனர். மேலும் இந்த சாதனை நமது நாட்டின் இளைஞர்களிடையே ஹாக்கி விளையாட்டை மேலும் பிரபலமாக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைமை பயிற்சியாளருமான கௌதம் கம்பீர் தனது எக்ஸ் பதிவில், “"ஹாக்கி ஒரு உணர்ச்சி" ஜெய் ஹிந்த்! எங்கள் சாம்பியன் ஸ்ரீஜேஷுக்கு சரியான விடைபெறும் நிகழ்வாக இருது அமைந்திருக்கிறது. புத்திசாலித்தனமான வெண்கலம்” என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேற்கொண்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது எக்ஸ் பதிவில், “இந்திய ஹாக்கி அணி வீரர்கல் தங்களது அற்புதமான முயற்சியின் காரணமாக ஸ்பெயினை வீழ்த்தியதுடன், இரண்டாவது முறையாக தொடர்ந்து ஒலிம்பிக் விளையாட்டில் இரண்டாவது முறையாக வெண்கலப்பதக்கத்தையும் வென்றுள்ளனர். இந்திய ஹாக்கி அணிக்கு என்னுடையை வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதுதவிர்த்து ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங், சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே உள்பட பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.