ரிஷப் பந்த் குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் உரிமையாளர் உருக்கமான பதிவு!

Updated: Tue, Nov 26 2024 21:22 IST
Image Source: Google

இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த இரு தினங்களாக சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏல்ம் நடத்தப்பட்டது. இதனால் எந்தெந்த வீரர்கள் எவ்வளவு தொகைக்கு ஏலம் செல்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. 

அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர். 

அதேசமயம் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், பிரித்வி ஷா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.  மேலும் 13வயதே ஆன இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக இளம் வயதில் விளையாடும் வீரர் எனும் சாதனையையும் படைத்துள்ளார். 

இந்நிலையில், இந்த ஏலத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீர்ர் ரிஷப் பந்தை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்ததை அடுத்து, அவர் முன்பு விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் உரிமையாளர் பரத் ஜிண்டல் தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ரிஷப் பந்த் நீங்கள் எப்போதும் என்னுடைய தம்பியாகவே இருப்பீர்கள். என் இதயத்தின் ஆழத்தில் இருந்து உங்களை நான் நேசிக்கிறேன்.

Also Read: Funding To Save Test Cricket

உங்களை எனது குடும்பத்தில் ஒருவராக கருதி, முடிந்தவரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முயன்றுள்ளேன். நீங்கள் வேறு அணிக்கு செல்வதை பார்க்க வருத்தமாகவும் உள்ளது. எப்போதும் நீங்கள் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் ஒரு அங்கம்தான். என்றாவது ஒருநாள் நாம் மீண்டும் ஒன்றுசேர்வோம் என்று நான் நம்புகிறேன். எல்லாவற்றிற்கும் நன்றி ரிஷப். உங்களிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்க்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை