ராஜத் பட்டிதார் அணியில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் என்பது சந்தேகம் தான் - அனில் கும்ப்ளே!

Updated: Wed, Jan 24 2024 22:29 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டிக்கு முன்னதாக இத்தொடரின் முதலிரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து அவருக்கான மாற்று வீரராக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜத் பட்டிதாருக்கு இந்திய அணியில் இடம்கிடைத்துள்ளது. 

முன்னதாக கடந்த தென் ஆப்பிரிக்க தொடரின் போது ஒருநாள் அணிக்காக அறிமுகமான ராஜத் பட்டிதாருக்கு தற்போது இந்திய டெஸ்ட் அணியிலும் இடம் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களிலும், இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ராஜத் பட்டிதார் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 

இந்நிலையில், ராஜத் பட்டிதார் கடந்த சில ஆண்டுகளாக அபாரமான ஃபார்மில் இருப்பதாகவும், ஆனாலும் நாளைய போட்டியில் அவருக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான் என்றும் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ராஜத் பட்டிதார் கடந்த சில ஆண்டுகளாக அபாரமான ஃபார்மில் இருக்கிறார். ஆனால் கடந்த ஆண்டு காயம் காரணமாக அவர் பெரும்பாலான போட்டிகளை தறவிட்டுள்ளார்.

இருப்பினும் அதிலிருந்து மீண்டு அவர் தற்போது மீண்டும் அணியில் இடம்பிடிப்பதை பார்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான போட்டியிலும் கூட இந்திய ஏ அணி தடுமாறிய போது அவர் அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தினார். விராட் கோலிக்கு பதிலாக ராஜத் பட்டிதாரை தேர்வு செய்த தேர்வாளர்கள் தனது பணியை சரியாக செய்துள்ளனர். ஆனால் நாளைய போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம்தான். 

ஏனெனில் இப்போது அணி நிர்வாகம் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்ய மாட்டார் என்று தெளிவாக கூறியுள்ளது. எனது கணிப்பின் படி நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும், அந்தாவது இடத்தில் கேஎல் ராகுலும், ஆறாவது இடத்தில் விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்தும், அதன்பின் ஆல் ரவுண்டர்களும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன். இதனால் ராஜத் பட்டிதாருக்கு இந்த அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் தான்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை