முன்னேற்றத்திற்கான விஷயங்களில் மட்டுமே எங்களுடைய கவனம் உள்ளது - ரோஹித் சர்மா!
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு பிரிட்ஜ்டவுன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் நடக்க இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு முன்பாக, இந்திய அணிக்கு கிடைக்கும் ஒரு நாள் போட்டிகள் எல்லாமே மிக முக்கியமானவை.
இன்று தொடரின் முதல் போட்டி நடக்க இருக்கின்ற காரணத்தால் சம்பிரதாய முறைப்படி பத்திரிகையாளர்களை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சந்தித்து பேசி இருக்கிறார். இதில் அவரிடம் பல முக்கியமான விஷயங்களை பத்திரிகையாளர்கள் கேட்டிருக்கிறார்கள். அதில் ஐந்து வருடத்திற்கு பிறகு ஆசியா தாண்டி விராட் கோலி சதம் அடித்திருப்பது குறித்தும் கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய ரோஹித் சர்மா, “இந்த கேள்விக்கு நான் பலமுறை பதில் சொல்லி விட்டேன். நாங்கள் உள்ளுக்குள் என்ன பேசிக் கொள்கிறோம் எங்களுக்குள் என்ன விளையாட்டு தொடர்பாக உரையாடல்கள் நடக்கிறது என்பது வெளியில் இருப்பவர்களுக்கு சுத்தமாக தெரியாது. எனவே வெளியில் என்ன பேசுகிறார்களோ அவர்கள் பேசிக் கொள்ளட்டும்.
எங்களுடைய கவனம் எல்லாம் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களையும் எப்படி சிறப்பாக பெறுவது? எப்படி ஆட்டங்கள் மற்றும் தொடர்களை வெல்வது? எங்களால் எப்படி அணிக்கு உதவ முடியும்? என்பதில் தான் இருக்கிறது. எங்கள் அணியில் நிறைய கிரிக்கெட் விளையாடிய வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு விளையாட்டு தொடர்பாக நாம் ஒவ்வொரு முறையும் சொல்லி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது கிடையாது.
அவர்கள் தாமாகவே விளையாட்டை புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள். அணிக்குள் வருகின்ற புதிய வீரர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்து, அவர்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள உதவுவதே எங்களுடைய வேலை. அணியின் முன்னேற்றத்திற்கான விஷயங்களில் மட்டுமே எங்களுடைய கவனம் இருக்கின்றது. நிச்சயமாக ஒரே இடத்திற்கு பல வீரர்கள் போட்டியிடுவதால் இது ஒரு சவாலானது. பேட்டர்கள் மற்றும் பவுலர்கள் என எங்களிடம் பல சாய்ஸ்கள் இருக்கிறது.
எனவே இது ஒரு பயிற்சியாளருக்கும் கேப்டனுக்கு மிகவும் சவாலானது. மற்ற எல்லா அணிகளுக்குமே இப்படித்தான் எங்களுக்கு மட்டுமல்ல. இப்பொழுது நான் எந்த மாதிரியான விஷயத்தை தேடுகிறோமோ அதற்கு யார் சரியாக வருவார்களோ என்பதை கண்டறிய வேண்டும்” என்று கூறியிருக்கிறார்!