இந்த வெற்றியை அப்படியே உலகக்கோப்பை தொடரிலும் தொடர விரும்புகிறோம் - ரோஹித் சர்மா!

Updated: Sun, Sep 17 2023 21:07 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று கொழும்புவில் நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றன. அதன்படி இன்று நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் விளையாடிய அந்த அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 15.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 50 ரன்களில் சுருண்டது. இந்திய அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.அதனை தொடர்ந்து 51 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 6.1 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “இன்று இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த தொடரின் இறுதி போட்டியில் இப்படி வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது நமது அணியின் வீரர்களின் நல்ல மனநிலையை வெளிக்காட்டுகிறது. நாம் பந்துவீச்சில் சிறப்பாக தொடங்கி பேட்டிங்கில் சிறப்பாக முடித்திருக்கிறோம். நான் ஸ்லிப் பகுதியில் பீல்டிங் செய்து கொண்டிருக்கையில் நமது பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவதை பார்க்கவே பெருமையாக இருக்கிறது. இன்று நமது அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.

அவர்களது திட்டம் மிகவும் தெளிவாக இருப்பதனாலே சிறப்பாக பந்து வீச முடிகிறது. இது போன்ற ஒரு செயல்பாட்டை நான் நீண்ட காலமாக என் மனதில் வைத்திருப்பேன். இந்த போட்டி இவ்வளவு சீக்கிரம் முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொருவருமே தங்களது திறனை வெளிக்காட்டி உள்ளனர். சிராஜிக்கு அதிக பாராட்டுகளை கொடுத்தே ஆக வேண்டும். ஏனெனில் அவரது பந்துவீச்சில் பால் காற்றில் வரும் போதும் சரி, பிட்ச்சாகும் போதும் சரி ஸ்விங் ஆகிறது. இந்த தொடரில் அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்த்துள்ளோம்.

இந்த வெற்றியை அப்படியே உலகக்கோப்பை தொடரிலும் தொடர விரும்புகிறோம். இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹார்திக் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். அதேபோன்று கே.எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதமும் அடித்து இருந்தனர். கில்லும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இப்படி பல்வேறு வீரர்களும் வெவ்வேறு சூழ்நிலைகளில் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியுள்ளனர்” என கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை