நாளை பிட்ச் வேற லெவலில் இருக்கும் - அக்ஸர் படேல்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்புக்கு பஞ்சமின்றி நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டாக, இந்தியா அதிக முன்னிலையுடன் இருக்கிறது. இந்திய அணியின் ஓப்பனிங்கிலேயே அதிரடி காட்டிய கேப்டன் ரோகித் சர்மா 212 பந்துகளில் 120 ரன்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் 3 வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.
இதன் பின்னர் வந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், புஜாரா, கே.எஸ்.பரத், அஸ்வின் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 240 ரன்களுக்கு 7 விக்கெட்கள் சென்றுவிட்டது. எனினும் அப்போது ஜோடி சேர்ந்த அக்ஸர் பட்டேல் - ரவீந்திர ஜடேஜா ஜோடி 81 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்து விளையாடி வருகின்றனர். 114 பந்துகளில் ஜடேஜாவும், 94 பந்துகளில் அக்ஷர் பட்டேலும் தங்களது அரைசதத்தை பூர்த்தி செய்தனர்.
இந்நிலையில் 2ஆவது நாள் ஆட்டம் முடிந்த பிறகு பேசிய அக்ஸர் பட்டேல் சுவாரஸ்ய தகவல்களை கொடுத்துள்ளார். அதில், “கடந்த ஒரு வருடமாகவே நான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். அதனுடைய நம்பிக்கை எனக்கு பக்கபலமாய் இருக்கிறது. எனது டெக்னிக்கள் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் கிடைக்கும் நேரங்களிலெல்லாம் நான் பேட்டிங்கிற்கான பயிற்சிகளை தொடர்ந்து செய்தேன். முடிந்தவரை என்னால் முடிந்த பங்களிப்பை கொடுப்பேன்.
எப்போதுமே பேட்டிங்கிற்கு செல்லும் போது பிட்ச்- குறித்த கவலையும், கடினமும் இருக்க தான் செய்யும். ஆனால் சிறிது நேரம் களத்தில் நின்ற பிறகு அவை காணாமல் போய்விடும். எனது கவனம் சிதறிவிடும்.நாளை நாங்கள் பேட்டிங் செய்யும் வரை பிட்ச் நன்றாக இருக்க வேண்டும். அதன்பின் பவுலிங் வீசும் போதும் எங்களுக்கு சாதகமாக மாறிவிட வேண்டும்” என கூறினார். எனினும் அக்ஸர் கூறியதை போல 3ஆவது நாளில் இன்னும் பந்தில் ஸ்பின் அதிகரிக்க வாய்ப்புள்ளது.