இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடுவது என்பது உலகின் சிறந்த வேலை - ஜேம்ஸ் ஆண்டர்சன்!

Updated: Fri, Jul 12 2024 20:26 IST
Image Source: Google

இங்கிலாந்தில் சுற்றுப்பாயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது 114 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் அறிமுக வீரராக விளையாடிய கஸ் அட்கின்சன் பந்துவீச்சில் 12 விக்கெட்டுகள் மற்றும் பேட்டிங் 70 ரன்களை விளாசியதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தினார்.

முன்னதாக இப்போட்டியுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக கடந்த 2003ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜேம்ஸ் ஆண்டர்சன், இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் 32 ஐந்து விக்கெட் ஹாலும் அடங்கும். அதுமட்டுமின்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் எனும் வரலாற்று சாதனையையும் ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி அவர் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இரு அணி வீரர்களும் தங்கள் வாழ்த்தினை தெரிவித்தனர். மேற்கொண்டு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் உள்பட அனைவரும் ஆண்டர்சனுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றன. அதேசமயம் இத்தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆண்டர்சன் அணியின் ஆலோசகராக செயல்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தனது கடைசி போட்டிக்கு பின் பேசிய ஜேம்ஸ் ஆண்டர்சன், “இன்று காலை மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. இரு அணிகளுடைய வீரர்களும் வரிசையாக அணிவகுத்த நிலையில் எனக்கு உற்சாக வரவேற்பினை வழங்கினர்.நான் இப்போதும் என் கண்ணீரை அடக்க முயற்சிக்கிறேன். நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு 21 வருடங்கள் விளையாடுவது நம்பமுடியாத முயற்சி. அதனால் நான் இவ்வளவு தூரம் முன்னேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் எனது வாழ்க்கை முழுவதும் காயம் இல்லாமல் இருந்தது நான் செய்த அதிர்ஷமாகும். 

இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடுவது என்பது உலகின் சிறந்த வேலை, அதனால் நீண்ட காலமாக அதைச் செய்யக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்தது. டிரஸ்ஸிங் ரூமில் நினைவுகளை உருவாக்குவது பற்றி நாங்கள் அதிகம் பேசுகிறோம், அது நமக்கு மட்டுமல்ல, நம் குடும்பங்களுக்கும் சேர்ந்து தான் என்பதை புரிந்துக்கொண்டேன். ஏனெனில் அவர்கள் உங்களுடன் பயணம் செய்கிறார்கள், என்னால் சில சமயம் வீட்டிற்கு செல்லமுடியாத நிலை இருந்தது. அப்போதும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு நம்பமுடியாத ஆதரவை அளித்து முடிந்தவரை என்னை விளையாட அனுமதித்தனர்.

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அவர்கள் எனக்காக செய்த அனைத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். சில அற்புதமான வீரர்களுடன் விளையாடும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. இந்த விளையாட்டில் விளையாடிய சில திறமையான கிரிக்கெட் வீரர்கள் அவர்கள். ஆனால், மிக முக்கியமாக, சில நல்ல மனிதர்கள் மற்றும் சில நண்பர்களை நான் இந்த பயணத்தில் சம்பாதித்துள்ளேன். இத்தனை வருடங்களாக நான் எத்தனை அற்புதமான வீரர்களுடன் விளையாடியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு நம்பமுடியாத பயணம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை