ஐபிஎல் தொடர் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளது - ஷிவம் தூபே!

Updated: Thu, Jul 18 2024 12:39 IST
Image Source: Google

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஆனாலும் இந்த உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்த சில வீரர்கள் மீது தொடரின் போதே பல்வேறு விமர்சனங்கள் எழத்தொடங்கியது, அவர்களை பிளேயிங் லெவனில் இருந்தும் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். 

அந்தவகையில் இந்திய அணியில் ஆல் ரவுண்டராக இடம்பிடித்த ஷிவம் தூபே மீது தான் அவ்வாறான விமர்சங்கள் பெரும்பாலும் முன்வைக்கப்பட்டன. ஏனெனில் பேட்டிங்கில் சில போட்டிகளைத் தவிர்ந்து பெரும்பாலான போட்டிகளில் சோபிக்கத் தவறியது மற்றும் பந்துவீச்சிலும் அணிக்கு எந்தவொரு பங்களிப்பையும் வழங்காதது என அவர் மீது விமர்சங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்தது. 

அதிலும் இறுதிப்போட்டியிலும் விளையாடிய ஷிவம் தூபே தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி ரசிகர்களை ஏமாற்றினார். நடந்துமுடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய அவர் 133 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கிடைத்த அனுபவம் எனது திறனை மேம்படுத்த நம்பிக்கை வழங்கியதாக ஷிவம் தூபே தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஷிவம் தூபே, “இந்திய கிரிக்கெட் மற்றும் வீரர்களின் வளர்ச்சியில் ஐபிஎல் தொடரானது குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. உலகின் சில சிறந்த வீரர்களுடன் இணைந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இளம் திறமையாளர்களுக்கு இது ஒரு அருமையான தளத்தை வழங்குகிறது. தனிப்பட்ட முறையில், ஐபிஎல்லில் விளையாடுவது ஒரு குறிப்பிடத்தக்க கற்றல் அனுபவமாக உள்ளது, இது எனது ஆட்டத்தை மேம்படுத்தவும் நம்பிக்கையைப் பெறவும் எனக்கு உதவியது.

ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து, இந்தியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இது புதிய ரசிகர்களைக் கொண்டு வந்துள்ளது, விளையாட்டின் பிரபலத்தை அதிகரித்தது மற்றும் அனைத்து மட்டங்களிலும் உள்ள வீரர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஐபிஎல் தொடரின் போட்டி சூழல் இந்திய கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தியுள்ளது. மேலும் அது இன்று சர்வதேச அரங்கில் நாம் காணும் வெற்றிக்கு பங்களிக்கிறது” என தெரிவித்துள்ளார். 

இந்திய அணி இம்மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்தொடர்களுக்கான இந்திய அணியில் ஷிவம் தூபே இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை