ENG vs IND: கிங் கோலி இஸ் பேக்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
கிரிக்கெட் ரசிகர்களால் ரன் மிஷின், கிங் கோலி என்று அழைக்கப்படும் விராட், கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசவில்லை. விராட் கோலிக்கு பின்னாள் இருந்த ஜோ ரூட் எல்லாம் தற்போது அவரை முந்துகிறார். இதனால் சர்வதேச கிரிக்கெட்டின் முன்னணி வீரர் என்ற பெருமையை விராட் கோலி இழந்தார்.
தற்போது கேப்டன் பதவியும் விராட் கோலியை விட்டு சென்றது. ஆர்சிபி அணிக்காகவும் விராட் கோலி இம்முறை பெரிதாக ரன் அடிக்கவில்லை. சொல்லப் போனால் முதல் முறையாக 3 முறை கோல்டன் டக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். அப்போது தான் தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்காத விராட் கோலி, மாலத்தீவில் தனது விடுமுறையை கழித்தார்.
தற்போது மிகவும் கடினமான இங்கிலாந்து மண்ணில் விராட் கோலி, அந்த நாட்டுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார். இது நிச்சயம் விராட் கோலிக்கு கடும் சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இதற்கான பயிற்சி ஆட்டத்தில் அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். முதல் இன்னிங்சில் விராட் கோலி பொறுமையாக விளையாடி 69 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து, 2ஆவது இன்னிங்சில் விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தார். எப்போதும் 4ஆவது இடத்தில் களமிறங்கும் அவர், இம்முறை 7ஆவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். இந்த இன்னிங்சில் விராட் கோலி தனது டிரெட் மார்க் பவுண்டரிகள், பந்தை அழகாக விடுதல் போன்ற டெஸ்ட் போட்டிக்கான உரித்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக எதிரணியில் விளையாடும் பும்ராவின் பந்தை விராட் கோலி சிக்சருக்கு விரட்டினார். இதனால் பும்ரா ஷாக் ஆனார். தொடர்ந்து பொறுப்பான இன்னிங்சை வெளிப்படுத்திய கோலி 98 பந்துகளில் 67 ரன்கள் அடித்தார்.
இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்சரும் அடங்கும்.இறுதியில் பும்ரா பந்துவீச்சில் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தாலும், இந்த பயிற்சி ஆட்டத்தில் பழைய கோலியை காண முடிந்தது. விராட் கோலியின் இந்த உத்வேகம், இங்கிலாந்து அணிக்கு அபாயத்தையே தரும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.