இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ், வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தின் பங்களதேஷ் பிரீமியர் லீக், இலங்கையின் லங்கா பிரீமியர் லீக் என ஒவ்வொரு நாடும் தங்களுக்கென தனி டி20 தொடர்களை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 லீக் தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் டெல்லி கேப்பிட்டல் அணியின் உரிமையாளர்களுடைய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியும் எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடருக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி எதிர்வரும் எஸ்ஏ 20லீக் தொடருக்கான பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியனது ஆஃப்கானிஸ்தான வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த அதிரடி தொடக்க வீரரான ரஹ்மனுல்லா குர்பாஸ் சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி, உலகெங்கிலும் நடத்தப்படு வரும் டி20 பிரான்சைஸ் கிரிக்கெட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன்படி சர்வதேச டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை 63 போட்டிகளில் விளையாடியுள்ள ரஹ்மனுல்லா குர்பாஸ் ஒரு சதம், 10 அரைசதங்களுடன் 1,657 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளார்.
மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள குர்பாஸ் 2 அரைசதங்களுடன் 289 ரன்களை எடுத்துள்ளார். அதுதவிர்த்து உலங்கேங்கிலும் நடைபெறும் டி20 பிரான்சைஸ் கிரிக்கெட்டில் 186 போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 29 அரைசதங்கள் என 4567 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வருகையின் மூலம் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் பேட்டிங் துறையானது வலிமைப்பெற்றுள்ளது.