கவுண்டி கிரிக்கெட்: இரட்டை சதமடித்து மாஸ் காட்டிய பிரித்வி ஷா; குவியும் பாராட்டு!

Updated: Wed, Aug 09 2023 20:52 IST
கவுண்டி கிரிக்கெட்: இரட்டை சதமடித்து மாஸ் காட்டிய பிரித்வி ஷா; குவியும் பாராட்டு! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட்டில் சச்சின் மற்றும் சேவாக் ஓய்வு காலத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்த கலவையாக பிரித்வி ஷா இருப்பார் என்று பல முன்னாள் வீரர்களும் கணித்திருந்தார்கள். இதற்கு ஏற்றார் போல அவருடைய ஆரம்ப காலமும் இந்திய கிரிக்கெட்டில் மிக அமர்க்களமாக இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்திய மண்ணில் அறிமுகமான பிரித்வி ஷா, அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.

ஆனால் அதற்குப் பிறகு அவர் பேட்டிங் தொழில்நுட்பத்தில் இருந்த சில கோளாறு மற்றும் ஊக்க மருந்து பிரச்சனையில் அவருக்கு ஓராண்டு தடை என அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி விட்டது. இந்த நிலையில் அவருக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரும் நன்றாக அமையவில்லை. எனவே அவர் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஒன்டே கப் தொடரில் கவுண்டி அணியான நார்த்தாம்டன்ஷைர் அணிக்கு விளையாட ஒப்பந்தமாகி விளையாடிக் கொண்டு வருகிறார்.

இன்று சோமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் நார்த்தாம்டன்ஷைர் அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. அணியின் இந்த முடிவை தனி ஒரு ஆளாக நின்று பேட்டிங்கில் நியாயப்படுத்தி இருக்கிறார் பிரித்வி ஷா. தொடக்க வீரராக களம் கண்ட பிரித்வி ஷா இந்தத் தொடரில் இங்கிலாந்தில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடியில் சமரசம் செய்யாமல் முன்னேறிய அவர், சோமர்செட் பந்துவீச்சாளர்களை ஒரு முனையில் நின்று கொண்டு வதம் செய்தார்.

சிறப்பாக விளையாடிய அவர் மேற்கொண்டு அப்படியே சென்று 150 ரன்கள் எட்டினார். அதற்கடுத்து இன்னும் ஆட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தி இங்கிலாந்து மண்ணில் லிஸ்ட் ஏ அதாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடிவத்தில் இந்தியர் ஒருவரின் அதிகபட்ச ரண்களை பதிவு செய்து, இரட்டை சதத்தை நிறைவு செய்தார். ஆனாலும் கூட அதற்கு மேலும் பிரித்வி ஷா அதிரடியை நிறுத்தவில்லை. 

மேற்கொண்டு மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 153 பந்துகளில் 28 பவுண்டரி 11 சிக்ஸர்கள் உடன் 244 ரன்கள் குவித்து ஒரு வழியாக பெவிலியன் திரும்பினார். இறுதியாக பிரித்விஷா அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 50 ஓவருக்கு 415 ரன்கள் குவித்திருக்கிறது. அணியின் ஒட்டுமொத்த ரன்னில் 50 சதவீதத்திற்கும் மேல் பிரித்வி ஷா அடித்திருக்கிறார். இதன் மூலம் பிரித்வி ஷா இங்கிலாந்து மண்ணில் லிஸ்ட் ஏ போட்டியில் அதிக ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். 

1999 இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிராக 183 ரன்கள் குவித்த கங்குலி முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் 1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் 175 ரன்கள் குவித்த கபில்தேவ் இருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை