காயத்தால் சில மாதங்கள் கிரிக்கெட்டை தவறவிடும் பிரித்வி ஷா! 

Updated: Thu, Sep 14 2023 19:16 IST
Image Source: Google

இந்திய அணியின் இளம் அதிரடி வீரராக பார்க்கப்பட்டவர் பிரித்வி ஷா. கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார் பிரித்வி ஷா. ஆனால் ஊக்க மருந்து சர்ச்சையால் தடை, சீனியர் வீரர்களை மதிக்காதது, களத்திற்கு வெளியில் மோதல் என்று பிரச்னைகளில் சிக்கினார் பிரித்வி ஷா. ஐபிஎல் தொடரில் ஃபார்மை மீட்டெடுக்க முடியாததுடன், ஃபிட்னஸ் பிரச்னையும் சேர்ந்து கொண்டது.

இதனால் ஆசியப் போட்டிகளுக்கான அணியில் கூட பிரித்வி ஷா சேர்க்கப்படவில்லை. ஃபார்மில் இருந்திருந்தால் ஆசியப் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு பிரித்வி ஷா தான் தலைமை தாங்கியிருப்பார். ஏனென்றால் யு19 இந்திய அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர். ஆனால் ஃபார்மில் இல்லாததால், வேறு வழியின்றி உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் லண்டன் ஒருநாள் கோப்பை தொடரில் நார்த்தம்டன்ஷையர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார் பிரித்வி ஷா. ஃபார்மில் இல்லாத பிரித்வி ஷாவை நார்த்தம்டன்ஷையர் ஒப்பந்தம் செய்தது ஏன் என புரியாமல் ரசிகர்கள் கிண்டல் செய்தனர். ஆனால் பிரித்வி ஷா கிண்டல்களுக்கு செவி கொடுக்காமல், வழக்கம் போல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதன் பலனாக 153 பந்துகளில் 28 பவுண்டரிகள், 11 சிக்சர்களுடன் 244 ரன்கள் விளாசி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் டர்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் 76 பந்துகளில் 126 ரன்கள் எடுத்து மிரட்டலான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இதனால் பிரித்வி ஷா விரைவில் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பாராட்டு மழையின் நனைந்து கொண்டிருந்த பிரித்வி ஷாவிற்கு, டர்ஹாம் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்தில் இருந்து மும்பை புறப்பட்ட பிரித்வி ஷா, காயத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டார். அண்மையில் என்சிஏ-வுக்கும் வந்து நிர்வாகிகளை சந்தித்தார்.

இந்த நிலையில் இளம் வீரர் பிரித்வி ஷா அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்கு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அவரின் முழங்காலில் ஏற்பட்ட காயத்தின் வீக்கம் இன்னும் குறையவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் தான் பிரித்வி ஷா விளையாடுவார் என்று பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை