PSL 2023: இமாத் வாசீம் காட்டடி; இஸ்லாமாபாத்திற்கு 202 டார்கெட்!
பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 19ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷர்ஜில் கான் 8 ரன்களிலும், ஆடம் ரோஸிங்டன் 20 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய தஹிர் 19 ரன்களிலும், சோயிப் மாலிக் 19 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் இமாத் வாசீம் - இர்ஃபான் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரு மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இமாத் வாசிம் அரைசதம் கடந்து அசத்தினார் .
இதற்கிடையில் இர்ஃபான் கான் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த மேத்யூ வேட் அடுத்தடுத்து பவுண்டரிகளை அடித்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் இமாத் வாசீம் 92 ரன்களைச் சேர்த்தார்.