PSL 2023: சம்பவம் செய்த ஆசாம் கான்; கிளாடியேட்டர்ஸுக்கு இமாலய இலக்கு!
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்கொள்கிறது.
அதன்படி கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இஸ்லாமாபாத் யுனைடெட் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வெண்டர் டுசென், சதாப் கான் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
மற்றொரு தொடக்க வீரரான காலின் முன்ரோவும் 22 பந்துகளில் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்கள் என 38 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த ஆசாம் கான் அபாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசித் தள்ளினார். அவருடன் இணைந்த ஆசிஃப் அலியும் அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது.
இதில் ஆசாம் கான் 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதற்கிடையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆசிஃப் அலி 21 பந்துகளில் 4 சிக்சர், ஒரு பவுண்டரி என 44 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆசாம் கான் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 42 பந்துகளில் 9 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 97 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்களைச் சேர்த்தது. குயிட்டா அணி தரப்பில் ஹாஸ்னைன், ஓடியன் ஸ்மித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.