PSL 2023: இஷானுல்லா அபார பந்துவீச்சு; 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது கிளாடியேட்டர்ஸ்!
பாகிஸ்தன் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் தற்போது தொடங்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் 3ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற முல்தான் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு மார்ட்டின் கப்தில் - ஜேசன் ராய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் மார்ட்டின் கப்தில் 7 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அப்துல் ஒரு ரன்னிலும், கேப்டன் சர்ஃப்ராஸ் அஹ்மத் 2 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஜேசன் ராயும் 27 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த உமர் அக்மல், இஃப்திகார் அஹ்மத், முகமது நவாஸ், நசீம் ஷா ஆகியோரும் வந்த வேகத்திலேயே விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்பின் வந்த முகமது ஹஸ்னைன் தனது பங்கிற்கு 22 ரன்களைச் சேர்த்தார்.
இறுதியில் முகமது ஹபீஸும் 18 ரன்களில் ஆட்டமிழக்க, குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முல்தான் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய இஷானுல்லா 5 விக்கெட்டுகளையும், சமீன் குல், அபாஸ் அஃப்ரிடி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.