PSL 2023: மீண்டும் மிரட்டிய அயூப், பாபர் ஆசாம்; 242 ரன்களை குவித்தது பெஷாவர்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் பெஷாவர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியிலுள்ள பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய பெஷாவர் அணிக்கும் சைம் அயூப் - பாபர் ஆசாம் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசிய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 134 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையிலும் அமைத்து அசத்தினர்.
அதன்பின் 33 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 58 ரன்களை எடுத்திருந்த சைம் அயூப் ஆட்டமிழக்க, இப்போட்டியிலும் சதமடிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசாம் 39 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 73 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 11 பந்துகளில் 4 சிக்சர்களை விளாசி 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் டாம் கொஹ்லர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 18 பந்துகளில் 38 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெஷாவர் ஸால்மி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களைக் குவித்தது. முல்தான் அணி தரப்பில் அபாஸ் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.