பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராவல்பிண்டியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இஸ்லாமாபாத் அணிக்கு எதிர்பார்த்த தொடக்க கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹெல்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், காலின் முன்ரோ 15 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த அகா சல்மான் - ஷதாப் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அகா சல்மான் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 37 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷதாப் கான் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் அபாரமாக விளையாடி வந்த ஷதாப் கான் 4 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 80 ரன்களை விளாசி விக்கெட்டை இழந்தனார். 

Advertisement

அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோர்டன் காக்ஸ் - அசாம் கான் இணை அதிரடியாக விளையாடியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு தேவையான ஃபினீஷிங்கை கொடுத்தனர். இதில் ஆட்டமிழக்காமல் இருந்த ஜோர்டன் காக்ஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 ரன்களையும், அசாம் கான் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 29 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைக் குவித்துள்ளது. பெஷாவர் ஸால்மி அணி தரப்பில் சைம் அயூப் இரண்டு விக்கெட்டுகளையும், லுக் வூட் மற்றும் சல்மான் இர்ஷத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய பெஷாவர் ஸால்மி அணியில் சைம் அயூப், கேப்டன் பாபர் ஆசாம், முகமது ஹாரிஸ், டாம் கொஹ்லர் காட்மோர், ரோவ்மன் பாவெல் என அதிரடி வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 18 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் ஜோடி சேர்ந்த பால் வால்டர் - அமர் ஜமால் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அமர் ஜமால் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பால் வால்டர் 33 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 8 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 87 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் கேப்டன் ஷதாப் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News