பாகிஸ்தானின் உள்ளூர் டி20 கிரிக்கெட் லீக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய கராச்சி அணிக்கு கேப்டன் ஷான் மசூத் - டிம் செய்ஃபெர்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிம் செய்ஃபெர்ட் 8 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து லூயிஸ் டு ப்ளூய் 24 ரன்களிலும், கேப்டன் ஷான் மசூத் 27 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய அனுபவ வீரர் சோயப் மலிக் மற்றும் முகமது நவாஸ் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

இதையடுத்து ஜோடி சேர்ந்த அனுபவ வீரர் கீரென் பொல்லார்ட் - இர்ஃபான் கான் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தி வந்தனர். அதிலும் இறுதி கட்டத்தில் இருவரும் அதிரடியாக விளையாடி பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கீரென் பொல்லார்ட் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 48 ரன்களையும், இர்ஃபான் கான் 4 பவுண்டரிகளுடன் 27 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கராச்சி கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்தது. இஸ்லாமாபாத் அணி தரப்பில் இமாத் வசிம், நசீம் ஷா, ஆகா சல்மான், ஹுனைன் ஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு காலின் முன்ரோ - அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த காலின் முன்ரோ தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலெக்ஸ் ஹேல்ஸ் 47 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 8 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 82 ரன்கள் எடுத்திருந்த காலின் முன்ரோவும் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய இமாத் வாசிமும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். இருப்பினும் அதன்பின் ஜோடி சேர்ந்த ஆகா சல்மான் - ஷதாப் கான் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

Advertisement

இதன்மூலம் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியானது 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் கராச்சி கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவிய காலின் முன்ரோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News