பிஎஸ்எல் 2024: பொல்லார்ட் அதிரடியில் பெஷாவரை வீழ்த்தியது கராச்சி!

Updated: Wed, Feb 21 2024 20:12 IST
Image Source: Google

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் - பெஷாவர் ஸால்மி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கராச்சி கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய பெஷாவர் ஸால்மி அணிக்கு கேப்டன் பாபர் அசாம் - சைம் அயுப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயுப் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ஹாரிஸ் 6 ரன்களுக்கும், கொஹ்லர் காட்மோர் 2 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த பாபர் அசாம் - ரோவ்மன் பாவேல் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் அதிரடியாக விளையாடிய பாபர் ஆசாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் ரோவ்மன் பாவேல் 39 ரன்களில் விக்கெட்டை இழக்க, 72 ரன்களைச் சேர்த்திருந்த பாபர் ஆசாமும் தனது விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்த் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணி 19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கராச்சி அணி தரப்பில் மிர் ஹம்சா, ஹசன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கராச்சி கிங்ஸ் அணிக்கு ஷான் மசூத் - முகமது அக்லக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷான் மசூத் 12 ரன்களிலும், அக்லக் 24 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த ஜேம்ஸ் வின்ஸ் - சோயப் மாலிக் இணையும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் 29 ரன்களில் சோயப் மாலிக் தனது விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் வின்ஸுடன் இணைந்த கீரென் பொல்லார்ட் அதிரடியாக விளையாடியதுடன், 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 49 ரன்களையும், ஜேம்ஸ் வின்ஸ் 38 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் கராச்சி கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெஷாவர் ஸால்மி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மிர் ஹம்சா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை