பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸை பந்தாடி முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!

Updated: Wed, Mar 13 2024 13:01 IST
பிஎஸ்எல் 2024: குயிட்டா கிளாடியேட்டர்ஸை பந்தாடி முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி! (Image Source: Google)

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 9ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி கராச்சியிலுள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய முல்தான் சுல்தான்ஸ் அணியில் யசிர் கான் 12 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த கேப்டன் முகமது ரிஸ்வான் - உஸ்மான் கான் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதன்பின் உஸ்மான் கானும் 21 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

அதன்பின் ரிஸ்வானுடன் இணைந்த ஜான்சன் சார்லஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவனெ உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் ஒரு பவுண்டரி, 4 சிக்சர்கள் என 69 ரன்கள் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ஜான்சன் சார்லஸும் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். 

இறுதியில் இஃப்திகார் அஹ்மத் 20 ரன்களைச் சேர்த்து ஃபினீஷிங்கைக் கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் முல்தான் சுல்தான்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களைச் சேர்த்தது. கிளாடியேட்டர்ஸ் தரப்பில் முகமது அமீர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கிளாடியேட்டர்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜேசன் ராய், சௌத் சகீல், கேப்டன் ரைலீ ரூஸோவ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய ஒமைர் யூசுஃப் ஒருபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வர, மறுமுனையில் களமிறங்கிய வீரர்களால் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் அரைசதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஒமைர் யூசுஃபும் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறவே, கிளாடியேட்டர்ஸ் அணி 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுல்தான்ஸ் அணி தரப்பில் டேவிட் வில்லி, உசாமா மிர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை