பிஎஸ்எல் 2022: பெஷ்வர் ஸால்மியை வீழ்த்தியது முல்தான் சுல்தான்ஸ்!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி - முல்தான் சுல்தான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி முகமது ரிஸ்வான், டிம் டேவிட் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 222 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 82 ரன்களையும், டிம் டேவிட் 51 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய பெஷ்வர் ஸால்மி அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். பின் ஸஸாய் 43 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்களும் வந்த வேகத்திலேயே பெவிலியனுக்கு திரும்பினர்.
பின்னர் பென் கட்டிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். இருப்பினும் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே எடுத்தது. சுல்தான் அணி தரப்பில் ஷான்நவாஸ் தானி, இம்ரான் தாஹிர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் பெஷ்வர் ஸால்மி அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.