பிஎஸ்எல் 2022: ரிஸ்வான், ரொஸ்ஸோவ் அதிரடியில் முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் - குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி முகமது ரிஸ்வான், ரிலே ரொஸ்ஸோவ், ஷான் மசூத் ஆகியோரது அரைசதத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 245 ரன்களைச் சேர்த்து.
இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 83 ரன்களையும், ரிலே ரொஸ்ஸோவ் 71 ரன்களையும், ஷான் மசூத் 57 ரன்களையும் சேர்த்தனர்.
இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் ஜேசன் ராய் 38 ரன்களையும், உமர் அக்மல் 50 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர். அவர்களை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் 15.5 ஓவர்களிலேயே குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களை மட்டுமே சேர்த்தது.
இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.