பிட்ச்களினால்தான் புஜாரா, விராட் கோலி மற்றும் தனது பேட்டிங் சராசரிகள் குறைந்தன - அஜிங்கியா ரஹானே!

Updated: Thu, Dec 22 2022 12:09 IST
Image Source: Google

ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் மும்பை வீரர் ரஹானே 261 பந்துகளில் 26 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 204 ரன்களை விளாசினார். இவருடன் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் ஆகியோரும் அதிரடி சதங்களை விளாச மும்பை 651/6 என்று டிக்ளேர் செய்தது. 

இந்நிலையில் இந்த இரட்டைச் சதத்திற்குப் பிறகு ரஹானே அளித்த பேட்டியில் இந்திய பிட்ச்களினால்தான் புஜாரா, விராட் கோலி மற்றும் தனது பேட்டிங் சராசரிகள் குறைந்தன என்று கூறியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய அவர், “என் சராசரி குறைந்ததற்கு என் பேட்டிங் ஸ்டைலில் உள்ள கோளாறு காரணமல்ல, என் பேட்டிங் ஸ்டைலில் கோளாறு இல்லை. 3, 4, மற்றும் 5-ம் நிலைகளில் இறங்கும் இந்திய வீரர்களைக் கவனியுங்கள். சராசரி குறைந்ததை கவனிப்பீர்கள், குறிப்பாக புஜாரா, விராட் மற்றும் என் சராசரிகள் குறைந்ததற்குக் காரணம் இந்தியாவில் விளையாடிய பிட்ச்களே.

தவறுகள் நிறைய செய்தோம் என்று நான் கருதவில்லை. ஒவ்வொரு முறையும் அவுட் ஆகும் போதும் நாங்கள் தவறிழைக்கிறோம் என்பதல்ல. சில வேளைகளில் பிட்ச்கள் காரணமாகின்றன. இது ஏதோ சாக்கு போக்கு சொல்வதல்ல. இந்தியாவில் எத்தகைய பிட்ச்கள் போடப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஒரு பேட்டராக மிடில் ஆர்டரில் ஆடுவது இத்தகைய பிட்ச்களில் மிகக் கடினம். தொடக்க வீரர்களுக்கு கொஞ்சம் எளிது. ஏனெனில் பந்து தன் தடிமனை இழந்திருக்காது. ஆனால் நாம் எப்போதுமே ஒரு பேட்டர் அவுட் ஆனால் அவர் ஏதோ தப்பாக ஆடிவிட்டார் என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறோம்.

அணிக்கு எப்போது என் பங்களிப்பு தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் பங்களிப்பு செய்துள்ளேன். மும்பைக்காக போட்டிகளையும் வெல்வதில் பங்களித்துள்ளேன். இரட்டைச் சதம் எப்போதும் சிறப்பு வாய்ந்தது. பந்தை நன்றாக டைமிங் செய்தேன், என் விருப்பப்படி ஷாட்கள் அமைந்தன.நான் எப்போதும் என் பழைய டைரிகளை எடுத்து மீண்டும் பார்ப்பேன், காரணம், அவுட் ஆனது எப்படி ஏன் என்பதை அதில் குறிக்கும் பழக்கம் எனக்கு முன்பு இருந்தது. இப்போது மீண்டும் அந்தப் பழக்கத்திற்கு வந்துள்ளேன்” என்று தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் பிரமாதமான தன் கேப்டன்சி மூலம் 36 ஆல் அவுட் தோல்விக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணியை தலைநிமிரச் செய்த கேப்டனான ரஹானே, இப்போது இந்திய அணியில் இடம்பெற போராடி வருகிறார். 34 வயதாகும் ரஹானே 82 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை ஆடியுள்ளார், இதில் 17 டெஸ்ட் போட்டிகளில் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ஆடியுள்ளார்.

2020-21 சீசனில் ரஹானேயின் ஃபார்ம் தடுமாற்றம் கண்டது. 8 டெஸ்ட் போட்டிகளில் 29.23 சராசரி. 2021-ல் மட்டும் ரஹானே 5 டெஸ்ட்களில் அதாவது 9 இன்னிங்ஸ்களில் 19 என்ற சராசரியில் ரன்களை எடுத்து திக்கித் திணறினார். 2021-22 சீசனில் 21.87 என்ற சராசரியை 8 இன்னிங்ஸ்களில் பரமாரித்தார். அந்த ஆஸ்திரேலியா தொடரில் மெல்போர்ன் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸில் ரஹானே 124 ரன்களை எடுத்ததுதான் ஒரே சதம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை