பஞ்சாப் கிங்ஸ் ட்வீட்டுக்கு பதிலளித்த மும்பை காவல்துறை; வைரல் பதிவு!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி சாம் கரணின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்களில் 214 ரன்களை குவித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியும் ஏறத்தாழ இலக்கை விரட்டியது.
இதில் மும்பை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அந்த கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் மட்டுமே சென்றது. 2ஆவது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 3ஆவது பந்தில் திலக் வர்மாவை அர்ஷ்தீப் சிங் போலடாக்க, மிடில் ஸ்டம்ப் உடைந்து சிதறியது.
இதனால் கடைசி 3 பந்தில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இந்த சூழலில் இம்பேக்ட் பிளேயராக நேஹல் வதேரா இறங்கினார், ஆனால் 4ஆவது பந்திலும் அர்ஷ்தீப் சிங் மிடில் ஸ்டம்பை இரண்டாக பிளந்து மாஸ் காட்டினார். அடுத்தடுத்து இரண்டு பந்துகள் மிடில் ஸ்டம்பை உடைத்து அனைவரையும் அசர வைத்தார்.
இதனால், கடைசி 2 பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்கப்பட்ட நிலையில் ஆட்டத்தை பஞ்சாப் வென்றது. அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங், 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, 24 லட்சம் மதிப்புள்ள இரண்டு ஸ்டம்புகளையும் உடைத்து மிரட்டினார்.
அர்ஷ்தீப் சிங் இரண்டு ஸ்டம்பை உடைத்தது பற்றி சமூக வலைதளத்தில் பேச்சுக்கள் எழ, பஞ்சாப் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கம், மும்பை காவல்துறையினரை டேக் செய்து 'நாங்கள் குற்றத்தை பதிவு செய்ய விரும்புகிறோம்', என்று கூறி ஸ்டம்ப் உடைந்த படத்தை பகிர்ந்தது. அதற்கு பதிலளித்த மும்பை காவலதுறையினர், "சட்டத்தை உடைப்பவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும், ஸ்டம்பை உடைப்பவர்களுக்கு அல்ல" என்று கூறியுள்ளது. தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.