சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இப்போட்டியில் மழைக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களைச் சேர்க்க, அடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 260 ரன்களையும் சேர்த்து ஆல் அவுட்டானது. பின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 87 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்ததுடன், இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 8 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
இறுதியில் தொடர் மழை காரணமாக இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனால் இரு அணிகளும் இத்தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனிலையில் நீடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டி முடிந்த கையோடு இந்திய அணி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தும் விதமாக நிகழ்கால ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 2010ஆம் ஆண்டு அறிமுகமான ரவிச்சந்திரன் அஸ்வின் இதுநாள் வரை 106 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த அஸ்வின் 151 இன்னிங்ஸில் 6 சதங்கள், 14 அரைசதங்கள் என 3503 ரன்களையும், 37 ஐந்து விக்கெட் ஹாலுடன் 537 விக்கெட்டுகளையும் கைப்பற்றி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதுதவிர்த்து 116 ஒருநாள் போட்டிகளில் 707 ரன்களையும், 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்டு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியிலும் அஸ்வின் இடம்பிடித்ததுடன், இந்திய அணி கோப்பையை வெல்வதற்கும் மிகப்பெரும் உறுதுணையாக இருந்தார் என்பதை யாராலும் மறக்க முடியாது. இந்நிலையில் அஸ்வினின் இந்த ஓய்வு முடிவு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.