25 ஆண்டுகளுக்கு முன் நடந்ததிற்கு டிராவிட்டிடம் மன்னிப்பு கோரிய ஆலன் டோனால்ட்!

Updated: Thu, Dec 15 2022 16:01 IST
Image Source: Twitter

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டோனால்ட், அவருடைய காலத்தில் விளையாடும்போது தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக விளங்கி இருக்கிறார். தற்போது இந்திய வங்கதேச டெஸ்ட் தொடரின் போது டிராவிட்டும், ஆலன் டோனால்டும் சந்தித்து பேசி இருக்கிறார்கள்.

அப்போது ராகுல் டிராவிட் உங்களை பயிற்சியாளராக பார்ப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. முன்பெல்லாம் முகத்தில் கிரீம் பூசி பேட்ஸ்மேன்களை பயமுறுத்தும் அளவுக்கு காணப்படுவீர்கள். இப்போது தான் பார்க்க நன்றாக இருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார். இதனை டிராவிட் தற்போது செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

இதை ஆலன் டோனால்ட் கேட்டதும், 1997 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆலன் டோனல்ட், “1997 ஆம் ஆண்டு இந்திய அணி டர்பனில் ஒரு நாள் போட்டியில் விளையாடியது. அப்போது சச்சினும் டிராவிட்டும் எங்கள் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். இதனால் எனக்கு கோபம் வந்துவிட்டது.

நான் அப்போது டிராவிட்டை அவதூறாக பேசி ஸ்லேஜிங் செய்தேன். அது ஒரு மோசமான சம்பவம். அது குறித்து தற்போது நான் பேச விரும்பவில்லை. சின்னத்தனமான காரியத்தை செய்து அவருடைய விக்கெட்டை நான் வீழ்த்தினேன். ஆனால் நான் இப்போதும் டிராவிட்டை பார்த்து நான் அன்று சொன்ன விஷயத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் ஒரு சிறந்த வீரராக இந்தியாவுக்காக விளங்கினார்.

ராகுல் டிராவிட் இந்த பேட்டியை பார்த்தால், என்னை மன்னித்து கொள்ளுங்கள். நான் உங்களை விடுதிக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.இந்த பேட்டியை பார்த்த ராகுல் டிராவிட், “ உங்களுடன் செல்லும் அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் தான் பில் பே செய்ய வேண்டும்” என்று கூறி கிண்டல் அடித்திருக்கிறார்.

1997 ஆம் ஆண்டு இந்தியா ,தென் ஆப்பிரிக்கா ஜிம்பாப்வே, அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் போட்டி நடைபெற்றது. அதன் இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 278 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 

அப்போது மழை குறிக்கிட்டதால் 40 ஓவரில் 252 ரன்கள் அடிக்க வேண்டும் என இருந்தது. அதில் டிராவிட்டை கடுமையாக டோனால்ட் ஸ்லேட்ஜ் செய்தார். அன்றைய ஆட்டத்தில் ராகுல் டிராவிட் 94 பந்துகளை எதிர் கொண்டு 84 ரன்கள் விளாசினார். குறிப்பாக டொனால்டு ஓவரின் அவர் சிக்ஸர்களை அடித்து அசத்தினார். 

எனினும் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டிக்குப் பிறகு டிராவிட்டிடம் மன்னிப்பு கேட்க டோனால்ட் விரும்பினார். ஆனால் இந்திய அணி நிர்வாகம் அவரை சந்திக்க அனுமதி அளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை