ENG vs IND, 5th Test: இந்திய அணியின் தோல்விக்கு இவர்கள் தான் காரணம் - ராகுல் டிராவிட்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்தியா ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்ததால், இப்போட்டியில் டிரா செய்தாலே போதும் என்ற நிலை இருந்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 416/10 ரன்களை குவித்தது. ரிஷப் பந்த் 146 (111), ஜடேஜா 104 (194) ஆகியோர் சதம் கடந்திருந்தார்கள். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ 106 (140) மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்திருந்தார். இதனால் இங்கிலாந்து அணி 284/10 ரன்களை மட்டும் சேர்த்து, 132 ரன்கள் பின்தங்கியது.
மெகா முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்ஸ் களமிறங்கிய இந்திய அணியில் புஜாரா 66 (168), ரிஷப் பந்த் 57 (86) ஆகியோர் மட்டும் அரை சதம் கடந்த நிலையில், இந்தியா 245/10 ரன்களை மட்டும் சேர்த்து, இங்கிலாந்துக்கு 378 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.
நான்காவது நாள், இரண்டாவது செஷனின்போது இலக்கை துரத்திக் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஓபனர்கள் அலேக்ஸ் லீஸ் 56 (65), ஜாக் கிரௌலி 46 (76) ஆகியோர் அசால்ட்டாக பவுண்டரிகளை விளாசி அசத்தினார்கள். அடுத்து ஒல்லி போப் டக் அவுட் ஆன நிலையில், ஜோ ரூட் , ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள். இவர்களை தடுத்து நிறுத்தவே முடியவில்லை.
இறுதியில் இங்கிலாந்து அணி 378/3 ரன்களை சேர்த்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, தொடரை 2-2 என சமன் செய்துள்ளது. பேர்ஸ்டோ 114 (145), ரூட் 142 (173) ஆகியோர் கடைசிவரை களத்தில் இருந்தார்கள்.
இப்போட்டியில் தோற்றப் பிறகு பேசிய இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட், ‘‘இப்போட்டியில் முதல் 3 நாட்களும் ஆதிக்கம் செலுத்தினோம். 2ஆவது இன்னிங்ஸில் சரியாக பேட்டிங் செய்யவில்லை. கிடைத்த 2,3 வாய்ப்புகள் கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்தவில்லை. தென்னாப்பிரிக்க தொடரிலும் இதேபோல் கேட்ச் போன்ற 2 வாய்ப்புகள் கிடைத்தும் அதனை தவறவிட்டோம். இதனால்தான், தொடரை இழந்தோம். தற்போது இங்கிலாந்து தொடரிலும் இதே நிலைதான்.
கடந்த 2 வருடங்களாக டெஸ்டில், 20 விக்கெட்களையும் வீழ்த்தி வெற்றியைப் பெற்ற இந்திய அணியால், கடந்த 2 மாதங்களாக அதனை செய்ய முடியவில்லை. உடற்தகுதியை சரிவர பின்பற்ற முடியாமல் போனதும் ஒரு காரணமாக இருக்கலாம். பேட்டிங் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. பேட்டிங்கில் சிறப்பாக தொடங்கிவிட்டு, அதனை முடிக்க முடியாமல் திணறுகிறோம்” என்று தெரிவித்தார்.