ஐபிஎல் 2025: ராகுல் டிராவிட்டை பயிற்சியாளராக நியமித்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!
உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஐபிஎல் தொடரானது 18ஆவது சீசனை நோக்கி பயணித்து வருகிறது. அந்தவகையில் எதிர்வரும் 18ஆவது சீசன் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இத்தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கான மெகா எலாமும் நடைபெறவுள்ளதால் இத்தொடரின் மீது கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன. இதன் ஒருபகுதியாக அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு தற்போதில் இருந்தே ஐபிஎல் அணிகள் தங்களது பணிகளை மேற்கொண்டு பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர்.
அதன்படி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது தங்களது தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங்கை பதவியில் இருந்து நீக்கியுள்ளது. மேற்கொண்டு எதிர்வரவுள்ள வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்களும் தங்கள் அணியில் இருந்து விலகி ஏலத்தை எதிர்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்களும் மாற்றப்படவுள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் அத்தகவலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று அதிகாரப்பூர்மாக உறுதிசெய்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிந்த நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இதுகுறித்து பேசியுள்ள ராகுல் டிராவிட், “கடந்த பல ஆண்டுகளாக நான் 'ஹோம்' என்று அழைக்கப்பட்ட உரிமைக்கு திரும்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகக் கோப்பைக்குப் பிறகு, நான் மற்றொரு சவாலை எதிர்கொள்ள இதுவே சிறந்த நேரம் என்று நினைக்கிறேன், அதைச் செய்வதற்கு ராயல்ஸ்தான் சரியான இடம். மனோஜ், ஜேக், குமார் மற்றும் குழுவினரிடமிருந்து நிறைய கடின உழைப்பு மற்றும் ஆலோசனைகள் கடந்த சில ஆண்டுகளாக உரிமையை உருவாக்கியது. எங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் வளங்களின் அடிப்படையில் இந்த அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இது ஒரு உற்சாகமான வாய்ப்பாகும்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் தங்கள் எக்ஸ் பக்கத்தில், “உலகக் கோப்பையை வென்ற இந்தியாவின் புகழ்பெற்ற பயிற்சியாளர் ராகுல் டிராவிட், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மீண்டும் திரும்புகிறார்! கிரிக்கெட் ஐகான் ராயல்ஸ் ஸ்போர்ட்ஸ் குரூப் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் லுஷ் மெக்ரம்மிடம் இருந்து தனது பிங்க் நிற ஜெர்சியைப் பெறுகிறார்” என்று பதிவிட்டதுடன், அந்த புகைப்படத்தையும் இணைத்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்த எக்ஸ் பதிவானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.