ரஞ்சி கோப்பை 2023: ருத்ரதாண்டவமாடிய கேதர் ஜாதவ்; இரட்டை சதமடித்து விமர்சனங்களுக்கு பதிலடி!

Updated: Thu, Jan 05 2023 19:35 IST
Ranji Trophy: Kedar Jadhav smashes 283 in comeback FC match against Assam after three years (Image Source: Google)

ஒரு காலத்தில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் என்ற புகழைப் பெற்றிருந்தவர் கேதர் ஜாதவ். இவர், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் இடம்பற்றிருந்த சமயத்தில், வரலாற்றிலேயே அதிக அளவு ஓட்டப்பட்ட கிரிக்கெட் வீரராக இருந்திருப்பார். கேதர் ஜாதவ் பேட்டிங், பந்துவீச்சு, ஃபில்டிங் என பன்முகம் கொண்டவர். ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேதர் ஜாதவ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய விதம் ரசிகர்களை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

அதிலும் சிஎஸ்கேவின் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்கிய கேதர் ஜாதவ், அந்த ஆட்டத்தில், ஃபில்டர்களை எண்ணிவிட்டு, இறங்கி வந்து டோக் என்று ஒரு கட்டையை போட, அன்று முதல் சமூக வலைத்தளத்தில் கேலி, கிண்டலுக்கு ஆளானார். இதனையடுத்து, சிஎஸ்கே அணியிலிருந்து நீக்கப்பட்ட கேதர் ஜாதவ், அதன் பிறகு சன்ரைசர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 405 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியலில் கூட கேதர் ஜாதவின் பெயர் இல்லை. ஏலத்திற்கு பெயர் கொடுத்தும் நிராகரிக்கப்பட்டதால் விரக்தியின் உச்சத்தில் இருந்த கேதர் ஜாதவ் இன்று ரஞ்சி கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் அஸாம் - மகாராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அஸாம் அணி 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக புர்கயஷ்தா, ஆகாஷ் செங்குப்தா ஆகியோர் தலா 65 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய மகாராஷ்டிரா அணியில் பவன் ஷா 18 ரன்களிலும், ஷேய்க் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரரான சித்தேஷ் வீர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து அசத்தினார். பின் அவரும் 106 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இப்போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கிய கேதர் ஜாதவ், அதிரடியாக விளையாடி தன்மீதான விமர்சனங்களுக்கு பதிலடியைக் கொடுத்தார். அதிலும் ரியான் பராக், முக்தார், சாம்ராத் போன்ற திறமையான வீரர்கள் அடங்கிய பந்துவீச்சை தான், கேதர் ஜாதவ் இன்று பதம் பார்த்தார். 

இப்போட்டியில் மொத்தம் 283 பந்துகளை எதிர்கொண்ட அவர் 283 ரன்களை விளாசினார். இதில் 21 பவுண்டரிகளும், 12 இமாலய சிக்சர்களும் அடங்கும். இந்த இன்னிங்ஸ் மூலம், தம்மை ஏலத்தில் தேர்வு செய்யாத அணிகளுக்கும், கிண்டல் செய்த ரசிகர்களுக்கும் பதிலடி கொடுத்து இருக்கிறார் கேதர் ஜாதவ்.

இதன்மூலம் மகாராஷ்டிரா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 594 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்துள்ளது. அஸாம் அணி தரப்பில் ரியான் பராக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை