பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகிய ரஷித் கான்; ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா?
ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். இவர், ஆஃப்கானிஸ்தான் அணிக்காக 187 சர்வேதேச போட்டிகளில் விளையாடி 350க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும், 1700க்கும் அதிகமான ரன்களையும் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி உலகில் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டியில் பங்கேற்றுவரும் ரஷித் கான் இதுவரை 556 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இந்நிலையில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் தனது முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த ரஷித் கான் தற்போது அதிலிருந்து குணமடைந்து வருகிறார். இருப்பினும் அவரது காயம் முழுமையாக குணமடையாததால் பிக் பேஷ் லீக், எஸ்ஏ20 லீக் , ஐஎல் டி20 என உலகின் முக்கிய டி20 லீக் தொடர்களில் இருந்து விலகிய அவர், சமீபத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான சர்வதேச டி20 தொடரிலிருந்து விலகினார்.
இதனால் அவர் எப்போது மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ரஷித் கான் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் தனது காயம் முழுமையாக குணமடையாத காரணத்தினால் நடப்பாண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்தும் ரஷித் கான் விலகியுள்ளதாக தகவல் வெலியாகியுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக விளையாடிவரும் ரஷித் கான், தனது காயம் காரணமாக நடப்பு சீசன் பிஎஸ்எல் தொடரிலிருந்தும் விலகியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர் இந்தியாவில் நடைபெறும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நிச்சயம் பங்கேற்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிவரும் ரஷித் கான், இதுவரை 109 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 139 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் கடந்த இரு சீசன்களிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கு முக்கிய காரணமாக ரஷித் கான் அமைந்தார். இதனால் அவர் இந்த சீசனில் விளையாடவுள்ள செய்தி அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைச் செய்துள்ளது.