IND vs AUS, 2nd Test: முதல் நாளிலேயே சாதனைகளைப் படைத்த அஸ்வின், ஜடேஜா!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அபாரமாக விளையாடி வந்தது. குறிப்பாக முதல் விக்கெட்டுக்கு டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா ஜோடி 50 ரன்கள் சேர்த்தது.
இதில் டேவிட் வார்னர் 15 ரன்களில் முகமது சமி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து மார்னஸ் லாபஸ்சேன், கவாஜா ஜோடி அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலிய அணியின் ரன்களை சேர்த்தது. இந்த நிலையில் மதிய உணவு இடைவெளிக்கு முன் அஸ்வின் வீசிய ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் எடுக்கப்பட்டது. இதில் ஸ்மித் டக் அவுட் ஆகியும் மார்னஸ் லாபஸ்சேன் 18 ரன்களிலும் அஸ்வின் பந்துவீச்சில் வெளியேறினர்.
இதேபோன்று விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் அஸ்வின் பந்தில் டக்அவுட் ஆகினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பையில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றார்.
முதலாவதாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே 111 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இதேபோன்று மற்றொரு சாதனையும் அஸ்வின் படைத்திருக்கிறார். அதன் படி, உள்ளூர் மற்றும் சர்வதேச டெஸ்ட் போட்டிகள் என முதல் தர கிரிக்கெட்டில் மொத்தமாக 700 விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்திருக்கிறார். இது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. தற்போது பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் அஸ்வின் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இந்த போட்டியில் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினால் முதலிடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இதேபோன்று மற்றொரு கிரிக்கெட் வீரரான ஜடேஜா இன்று உஸ்மான் கவாஜா விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இந்தியாவுக்காக சர்வதே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 460 விக்கெட்டுகளுடன் 2ஆவது இடத்திலும், ஜடேஜா 250 விக்கெட்டுகளுடன் 8ஆவது இடத்திலும் உள்ளனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது.