உலகக்கோப்பை அணியில் அஸ்வின் ஆலோசகராக இருந்தால் நான் ஆச்சரியப்படப் மாட்டேன் - ஆரோன் ஃபிஞ்ச்!

Updated: Mon, Sep 25 2023 20:14 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இறுதியாக அணியை அறிவிக்கும் நாளாக, செப்டம்பர் 28ஆம் தேதி இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியில் அனுபவ சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறுவாரா? என்பது பலரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட உலகக்கோப்பை இந்திய அணியில் இரண்டு இடதுகை சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் வலதுகை சுழற் பந்துவீச்சாளர் ஒருவர் கூட கிடையாது. எனவே உலகக் கோப்பைக்கு முன்பாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு தரப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

கொடுக்கப்பட்ட வாய்ப்பில் ரவிச்சந்திரன் அஸ்வினும் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறார். இந்நிலையில் இத்தொடரில் அசத்துவதால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆலோசகர் பதவி கிடைக்குமே தவிர 15 பேர் உலகக்கோப்பை இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய ஆரோன் ஃபிஞ்ச், “இது உலகக் கோப்பை தொடரில் மைதானங்கள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து அமையும் என்று நினைக்கிறேன். அந்த சமயத்தில் நீங்கள் அணியின் பின் முனையை பற்றி சிந்திக்க வேண்டும் என்பது சிறந்த உலகக்கோப்பை அணியை தேர்ந்தெடுப்பதற்கான திறமைகளில் ஒன்றாக இருக்கும். ஆனால் நீங்கள் அதைப் பற்றி அதிகம் சிந்திக்க முடியாது. ஏனெனில் நீங்கள் அங்கு செல்ல வேண்டும்.

அந்த சூழ்நிலையில் அவர் 15 பேர் கொண்ட அணியில் இடம் பிடிக்க தடுமாறிவார் என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் ஏராளமான கிரிக்கெட்டை விளையாடியுள்ள அவரிடம் இந்த ஆஸ்திரேலிய தொடரில் எஞ்சிய வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ளலாம். ஏனெனில் டி20 உட்பட எந்த வகையான போட்டியாக இருந்தாலும் அஸ்வின் முக்கிய தருணங்களில் சிறப்பாக செயல்படும் தன்மையை கொண்டவர். எனவே உலகக்கோப்பை அணியில் அவர் ஆலோசகராக இருந்தால் நான் ஆச்சரியப்படப் மாட்டேன். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் 15 பேர் கொண்ட அணியில் இருப்பார் என்று எனக்கு தோன்றவில்லை” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை