சர்வதேச புதிய மைல்கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டின் செய்த இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்துள்ளது. இப்போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில் மற்றும் ராஜத் பட்டிதார் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் அடுத்து ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா - ரவீந்திர ஜடேஜா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 200 ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா சதமடித்து அசத்திய நிலையில் 131 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் தனது பங்கிற்கு 62 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதேசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரவீந்திர ஜடேஜா சர்வதேசடெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது சதத்தைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களையும் கடந்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது இந்திய வீரர் எனும் சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார்.
இதற்கு முன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,248 ரன்களையும், 434 விக்கெட்டுகளையும் கைப்பற்றி முதலிடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 3,271 ரன்களையும், 499 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அந்த வரிசையில் தற்போது ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,003 ரன்களையும், 280 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.