நாடு திரும்பிய ரெஹான் அஹ்மத்; 5ஆவது டெஸ்ட்டில் இருந்தும் விலகல்!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்.23) ராஞ்சியில் நடைபெற்று வருகிறது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் செய்துவரும் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முன்னதாக இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டது. அதில் மார்க் வுட், ரெஹான் அஹ்மத் ஆகியோர் பிளேயிங் லெவனிலிருந்து நீக்கப்பட்டு, ஒல்லி ராபின்சன், சோயப் பஷீர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்து விளையாடி வந்த சுழற்பந்து வீச்சாளார் தனிப்பட்ட காரணங்களுக்கு நாடு திரும்பியுள்ளார். இதனால் அவர் இந்திய அணிக்கெதிரான் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் இடம்பெறமாட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் விளையாடிய ரெஹான் அஹ்மத் மொத்தமாக 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட காரணங்களால் ரெஹான் அஹ்மத் நாடு திரும்பியுள்ளார். மேலும் அவர் இத்தொடருக்காக இந்தியா திரும்பமாட்டார். அதேசமயம் அவருக்கான மாற்று வீரராக யாரையும் நாங்கள் அறிவிக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது. முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இத்தொடரிலிருந்து முழமையாக விலகியது குறிப்பிடத்தக்கது.