ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக்கொண்டேன் - யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பின் விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் மீண்டும் ஆஸ்திரேலிய அணி இத்தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதில் சிட்னியில் நடைபெற்ற தொடரின் வெற்றியாளரைத் தீர்மனிக்கும் 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் முன்னிலை பெற்றது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய அணி பேட்டிங்கில் சோபிக்க தவறியது.
அதில் ரிஷப் பந்த் 61 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் தங்கள் விக்கெட்டுக்ளை இழந்தனர். இதனால் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 157 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானதுடன், 162 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இந்நிலையில் இத்தொடரில் இந்திய அணி தரப்பில் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடினார். அந்தவகையில் இத்தொடரின் அனைத்து போட்டிகளையும் சேர்த்து 10 இன்னிங்ஸில் விளையாடிய அவர் 43.44 என்ற சராசரியில் 391 ரன்களை அடித்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்களும் அடங்கும். இந்நிலையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் சமுக வலைதள பதிவு ஒன்றானது வைரலாகி வருகிறது.
Also Read: Funding To Save Test Cricket
அதன்படி ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் பதிவில், “ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக்கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக முடிவு நாங்கள் எதிர்பார்த்தது போல் இல்லை, ஆனால் நாங்கள் மீண்டும் வலுவாக திரும்பி வருவோம். உங்கள் ஆதரவுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 டெஸ்ட் போட்டியில் விளையாடி 4 சதம், 10 அரைசதங்கள் என 1798 ரன்களைக் குவித்துள்ளார்.