மகளிர் டி20 உலகக்கோப்பை: விண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

Updated: Wed, Feb 15 2023 21:58 IST
Image Source: Google

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கேப்டவுனில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.

கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்டபானி டெய்லர், ஷெமைன் காம்பெல்லே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தனர். ஸ்டபானி 42 ரன்களும், ஷெமைன் காம்பெல்லே 30 ரன்களும் சேர்த்தனர். செடீன் நேசன் 21 ரன்களும், ஷபீகா 15 ரன்களும் அடித்தனர்.

இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட் கைப்பற்றினார். பூஜா வஸ்த்ராகர், ரேணுகா சிங் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா 10 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிஸ்க் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

பின்னர் அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் - ரிச்சா கோஷ் இணை அதிர்டையாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ஹமர்ன்ப்ரீத் 33 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிச்சா கோஷ் 32 பந்துகளில் 5 பவுண்டரிகளை விளாசி 44 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இந்திய மகளிர் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. 

இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய தீப்தி சர்மா ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளுடன் குரூப் பி பட்டியலில் இரண்டாம் இடத்தை தக்கவைத்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை