இது எப்படி அவுட் ஆகும்? மூன்றாம் நடுவரை விளாசிய வர்ணனையாளர்கள்!
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டனிலுள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதன் இன்னிங்ஸில் 469 ரன்களையும், இந்திய அணி 296 ரன்களையும் எடுத்திருந்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
இதில் ஷுப்மன் கில் 19 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 18 ரன்களை சேர்த்தார். அப்போது ஸ்காட் போலாண்ட் வீசிய பந்தை கில் அடிக்க முயன்ற போது அது ஸ்லீப்பில் கேட்ச் ஆனது. கேமரூன் க்ரீன் டைவ் அடித்து பந்தை ஒற்றை கையால் பிடிக்கும் போது பந்து தரையில் பட்டது தெளிவாக தெரிந்தது. ஆனால் அது கேட்ச்சா? இல்லையா? எனும் முடிவு மூன்றாவது நடுவரிடம் சென்றது. ரீப்ளேவில் பார்த்தபோது பந்து தரையில் பட்டது தெளிவாகத் தெரிந்தது. அவுட் இல்லை என்று வரும் என பலரும் கருதினர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், மூன்றாவது நடுவர் அவுட் என அறிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த கிரிக்கெட் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி, “ரீப்ளேவில் பந்தை பிடிக்கும் போது க்ரீனின் விரல் பந்துக்கு கீழ் இருப்பதாக மூன்றாம் நடுவர் கூறுகிறார். ஆனால் பந்தின் ஒரு பகுதி தரையில் பட்டதை அவர் ஏன் பார்க்கவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோன்று இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சங்ககாராவும் மூன்றாம் நடுவரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பந்து பிடித்தாரா? இல்லையா? என்பதை விட பந்து தரையில் பட்டதை ஏன் மூன்றாம் நடுவர் கணக்கிலே எடுத்துக் கொள்ளவில்லை என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், “பந்துக்கு கீழ் விரல் இருப்பதாகவும் பந்தை அவர் கடைசி வரை விடவில்லை என்பதற்காகவும் மூன்றாம் நடுவர் அவுட் அறிவித்திருக்கிறார். ஆனால் பந்தின் ஒரு பகுதி தரையில் பட்டிருக்கிறது. இது நிச்சயம் சர்ச்சை ஆகும்” என்று கூறியிருக்கிறார்.