என்னுடைய தற்போதைய வாழ்க்கை முறைக்கு அது சரிப்பட்டு வராது - ரிக்கி பாண்டிங்!

Updated: Thu, May 23 2024 13:46 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், வரவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் நிறைவடையவுள்ளது. முன்னதாக ரவி சாஸ்திரி தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகியதும் ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

இதுவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியைத் தழுவியது. மேலும் அத்தொடருடனே டிராவிட்டின் பயிற்சி காலமும் நிறைவடைந்த நிலையில், அவரது பதிவிக்காலம் மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது டி20 உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவி காலம் நிறைவடைகிறது. 

இதனால் இந்திய அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அதன்படி பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் நெறிமுறைகளையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. மேற்கொண்டு நியூசிலாந்தின் ஸ்டீஃபன் பிளெமிங், ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோர் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆவதற்கான வாய்ப்பைத் தான் நிராகரித்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எனது ஆர்வம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஐபிஎல் சீசனின் போது இது தொடர்பாக சிறிய அளவிலான உரையாடல் நடந்தது. எனக்கும் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை கவனிக்க வேண்டுமென்ற விருப்பம் உள்ளது.

ஆனால் எனக்கு வேறு சில விஷயங்களும் என் வாழ்வில் இருக்கின்றன. என்னுடைய குடும்பத்தினருடன் நேரம் செலவளிக்க நான் விரும்புகிறேன். அனைவருக்கும் தெரியும், இந்திய அணிக்குப் பயிற்சியாளராகிவிட்டால் ஐபிஎல் அணியில் இருக்கக்கூடாது. அதிலிருந்தும் நான் வெளியேற வேண்டியிருக்கும். அதேபோல தேசிய அணியின் பயிற்சியாளர் என்றால் ஆண்டுக்கு 10 அல்லது 11 மாத காலம் பணியாற்ற வேண்டி இருக்கும்.

எனக்கு அதைச் செய்ய விருப்பமிருந்தாலும், என்னுடைய தற்போதைய வாழ்க்கை முறைக்கு அது சரிப்பட்டு வராது” என்று தெரிவித்துள்ளார். தற்சமயம் ரிக்கி பாண்டிங் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுவருகிறார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 27 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளதுடன், கேப்டனாக இரண்டு முறை ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களையும் வென்றுள்ளார் ஏன்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை